எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 ஜூன், 2015

அந்தப் பூக்கள் வாடிக்கொண்டிருக்கின்றன. :-



அந்தப் பூக்கள் வாடிக்கொண்டிருக்கின்றன. :-

ஆதாரமில்லாமல்
அந்தரத்தில் தொங்கும்
அந்தப் பூக்கள் வாடிக்கொண்டிருக்கின்றன

காம்புக் கால்களால் நின்றுகொண்டு
கதிர்களிடம் யாசிக்கின்றன
திரும்பத் திரும்ப மேல்வந்துவிழும்
அக்கினிக் கேள்விகளுக்குப்
பதில் தெரியாத அசட்டுமாணவனாய்
அவமானப்பட்டுச் சுருங்குகின்றன.

கரங்களின் தொடுதல்களுக்குக்
காத்திருந்த அவைகளுக்குக்
காற்றின் முத்தங்கள்கூடக்
கிடைக்கவில்லை.

மெல்லிய பூக்கள்
வரதட்சணையில்லாப் பெண்ணாய்
வெய்யில் ஏற ஏற வதங்கிக்
கிழவியாகின்றார்கள்.

காம்பறுக்கப்பட்ட அந்தப் பூக்கள்
தெய்வங்களுக்கு மட்டுமல்ல
பிணங்களுக்குக்கூடப் போடப்படவில்லை.

யாருமறியாமலே புஷ்பவதியான அவை
தன் மரிப்புக்குக் காலையிலேயே
கண்ணீர் வடித்து விடுகின்றன.

காய்ந்த பூக்கள் கடைசியாய்க்
கருணையுடன் அனுமதிக்கப்படுகின்றன
மண்ணை முத்தமிடுவதற்கு.

இந்தப் பூக்களுக்கு வேருமில்லை
கிளையுமில்லை.
மகரந்தப் பையையும்
மணத்தையும்தவிர.

விதையைப் பொதித்திருக்கும்
அந்தப் பூக்கள் விதைக்க
நிலமில்லாமல் மௌனித்திருக்கின்றன.

தங்கள் சுகந்த ஞாபகங்களை
காற்றுக்குத் தானமாய்க்
கொடுத்துவிட்டு மண்ணில்விழும்
அந்தப் பூக்கள் தங்களுக்குத் தாங்களே
மண்சமாதி கட்டிக்கொள்ளும்.

-- 85 aam varuda diary. 

6 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான கவிதை!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... உண்மை...

TVN சொன்னது…

டைரி கிறுக்கல் இல்லை..உறுக்கல். உண்மையிலேயே
மலர்களின் அற்ப ஆயுசை விவரித்து நெகிழ்ந்த நடையில்
கவிதை மலர்கள் மடிந்தாலும் நம் மடியில் ஆறுதல்
பெறுகிறது என்று தான் சொல்லவேண்டும். மலர்கள் தான் இறைவனின் முதல் படைப்பு, விருப்பம்..அதனால் தானோ
என்னவோ அவைகள் தியாகத்தில் திளைத்து கடைசி நொடித்
தருணம் வரை மணம் விட்டுச் சென்று நம்மை இன்னும்
நினைவிலிருத்துகின்றன... விடியலின் அடையாளம்
மலர்கள், கதரவன் முதலில் அணைக்கும் மலர்கள். பரமனின் பாதம் முதல் உச்சி வரை அவரை ஆட்கொள்பவை. கசங்கி கருகி போவது மலரல்ல, நம் மனம் என்பதை சுட்டிக் காட்டுகிறதோ?

அருமையான பதிவு, வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். வாழ்க, வளர்க, வெல்க!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தளிர் சுரேஷ்

நன்றி டிடி சகோ

நன்றி டிவிஎன் சார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

அருமை பாராட்டுக்கள் விதையை பொதித்திருக்கும் அந்தபூக்கள்
நிலமில்லாமல் மொளனித்திருக்கின்றன , அன்றைய உறுத்தல்

சரஸ்வதிராசேந்திரன்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...