எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 மார்ச், 2014

பிரியங்கள் சுமந்த கூடு.

கரையப் போகின்றவா 
கூவப் போகின்றனவாவென்ற
பேதங்களற்று
பிரியங்கள் சுமந்த கூடொன்றை
அடைகாத்துக் கொண்டிருந்தது காகம்.

சனி, 22 மார்ச், 2014

மரத்தின் குரல்..

மௌனக்காட்டில் சொற்களை உதிர்க்கிறது மரம்.
அசைந்து அசைந்து இறங்கும் சொற்கள் வாக்கியமாகின்றன.
சருகுகள் உச்சரிக்கின்றன மரத்தின் குரலை...

வெள்ளி, 14 மார்ச், 2014

காய்தல்.

அடித்துப் பிழிந்து அலசித்
துவைத்துப் போட்டிருக்கிறேன்.
மழை ஈரத்தில்
நசநசப்பாய்
ஆம்பல் பூத்துக்
காய்ந்து கொண்டிருக்கிறது
உன் நினைவு..

சனி, 8 மார்ச், 2014

சுயத்தோடும் சுயரூபத்தோடும்.

ஒவ்வொரு கணத்திலும்
நேசிக்குமென்னிலிருந்து
வேறொன்றும் விளைகிறது..

ஒரு கணம் விலகி
சுயத்தோடும் சுயரூபத்தோடும்
கோரைப்பல் முளைக்குமென்னை
நோக்கி நீள்கிறது உன் புன்னகை.

பேச்சும் ஏச்சும் புகையாய்ப் பரவ
என்னின் பல பரிமாணங்களையும்
அவ்வப்போது வெளிக் கொணரும்
உன்னையும் உண்ணத் துவங்குவேன்.

மௌனமாய் ஒப்புக் கொடுக்கும்
உன்னை உண்டு கோபத்தீயடங்கி
சாம்பல் பூக்குமென்னை
மழையாயும் விழுந்து குளிர்விப்பாய்.

மண்ணோடு மண்ணாய்க்
கலந்து கிடப்போம்,
மதகுகள் உடைத்த
வெள்ளத்தில் மூழ்கி..

Related Posts Plugin for WordPress, Blogger...